எழுத்துப் போராளி அமரர் சுப்பிரமணியன் சிவநாயகம் அவர்களுக்குச் சாவில்லை!

நாடு போற்றிய எழுத்தாளர், தாள் ஆசிரியர், நூலாசிரியர் என ஊடகத்துறையில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாது ஒரு புலி போல வலம் வந்த சிவா என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்ட சுப்பிரமணியன் சிவநாயகம் தனது 80 ஆவது அகவையில் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் கவலை அடைகிறோம். ஒரு விதத்தில் கடந்த அய்ந்து ஆண்டுகளுக்கும் மேலாக தீராத நோயினால் உடல் நலிவுற்றிருந்த அமரர் சிவநாயகம் அவர்களுக்கு இந்தச் சாவு துன்பத்தில் இருந்து விடுதலை வாங்கிக் கொடுத்திருப்பதாகவே நாம் கருதுகிறோம்.

அமரர் சிவநாயகம் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தோடு தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டவர். விடுதலைப் பயிருக்குத் தனது எழுத்து மூலம் நீர் வார்தது வளர்த்தவர். அதனால் சிங்கள ஆட்சியாளர்களது அடக்கு முறைக்கு ஆளானவர்.

ஊடகத் துறையில் Daily News (1953-1955) Daily Mirror (1961 – 1969) போன்ற நாளேடுகளிலும் தனியார் நிறுவனங்களிலும் பணியாற்றிக் கொண்டிருந்த அமரர் சிவநாயகத்தை 1981 ஆம் ஆண்டு யாழ்ப்பாண நூல்நிலையத்தைச் சிங்களக் காடையர்கள் தாக்கி எரியூட்டி அழித்த நிகழ்ச்சியே அவரை அரசியலில் அக்கறை கொள்ள வைத்தது. குறிப்பாக அந்த நிகழ்ச்சியை சிங்களவர்களால் நடாத்தப்பட்ட ஊடகங்கள் இருட்டடிப்புச் செய்ததை ஒரு ஊடகவியலாளன் என்ற முறையால் அவரால் செரிக்க முடியவில்லை.

விடுதலைக்காகப் போராடிய தமிழ்மக்கள்; மீது சிங்கள அரசினால் கட்டவிழ்த்து விடப்பட்ட அரச பயங்கரவாதத்தை வெளியுலகுக்கு அம்பலப்படுத்த வேண்டும் என்றால் அதனை ஒரு ஆங்கில செய்தித்தாள் மூலம்தான் செய்ய முடியும் என்று அவரும் அவரது நண்பர்களும் முடிவு செய்தார்கள்.

1981 ஆம் ஆண்டுக் கடைசியில் தனது குடும்பத்தோடு யாழ்ப்பாணத்துக்கு இடம்பெயர்ந்த அமரர் சிவநாயகம் Saturday Review என்ற வார ஏட்டை 1982 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் தொடங்கினார். இந்த ஏட்டில் வெளிவந்த அமரர் சிவநாயகத்தின் ஆசிரிய தலையங்கள், கட்டுரை, செய்திகள் சிங்கள ஆட்சியாளர்களது கோபத்தைக் கிளறியது. முடிவு Saturday Review செய்தித்தாள் 1983 யூலை முதல் நாள் தடைசெய்யப்பட்டு அதன் அலுவலகம் மூடப்பட்டு முத்திரை வைக்கப்பட்டது.

சிங்கள காவல் நாய்களினால் தேடப்பட்ட அமரர் சிவநாயகம் ஒரு நாள் நள்ளிரவு படகு மூலம் தமிழ்நாட்டுக்குத் தப்பி ஓடினார். அங்கும் அவர் ஓய்ந்திருக்கவில்லை. Tamil Nation என்ற மாதம் இருமுறை ஏட்டினை நடத்தினார். 1991 மே 21 இல் இராசீவ் காந்தி கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அமரர் சிவநாயகம் தமிழ்நாடு காவல்துறையால் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். ஒன்றரை ஆண்டுகள் சிறைச்சாலையிலும் மருத்துவ மனையிலும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட அவர் 1993 ஆம் ஆண்டு இந்தியாவை விட்டு வெளியேற்றப்பட்டார்.

ஒன்றரை ஆண்டு காலமாக நாடு நாடாக அலைந்து திரிந்த அமரர் சிவநாயகம் பிரான்ஸ் நாட்டில் அரசியல் அடைக்கலம் பெற்றார். பின்னர் இங்கிலாந்து சென்றடைந்தார். அங்கும் அவரது எழுத்துப் பணி தொடர்ந்தது. Hot Spring, Tamil Voice International போன்ற ஏடுகளின் ஆசிரியராக இருந்து சிறப்பாகப் பணியாற்றினார்.

20 ஆண்டு காலமாக தொடர்ச்சியாக எழுதிய அரசியல் கட்டுரைகளைத் தொகுத்து 'The Pen and the Gun' என்ற பெயரில் ஒரு நூலை 2001 ஆம் ஆண்டு வெளியிட்டார். பின்னர் ‘Srilanka: A Witness To History' என்ற நூலை 2004 இல் வெளியிட்டார். இந்த நூலில் 1930 – 2004 இடைப்பட்ட கால தனது அரசியல் நினைவுகளைப் பதிவு செய்துள்ளார்.

எங்கள் மத்தியில் ஆங்கிலத்தில் பன்னாட்டுத் தரத்துக்கு எழுதக் கூடிய எழுத்தாளர்கள் மிகக் குறைவு. இருக்கின்ற இரண்டொருவரும் தமிழீழ விடுதலைப போராட்டத்தை பயங்கரவாதம் என்றும் அதற்கு தலைமை தாங்கிய தமிழீழ விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதிகள் என்றும் கொச்சைப்படுத்துவதிலும் தமிழினத்தை எதிரிக்குக் காட்டிக் கொடுக்கும் திருப்பணியிலும் தங்கள் ‘திறமை’யை வெளிப்படுத்தினார்கள். இன்றும் இந்தக் காட்டிக் கொடுப்பும் கூட்டிக் கொடுப்பும் சில ஒத்துழைப்புத் தமிழர்களால் முன்னெடுக்கப்படுகிறது.

அமரர் சிவநாயகம் அவர்களது எழுத்துக்களில் சூடு இருப்பதுபோல் நகைச்சுவை உணர்வும் இருக்கும். The Pen and the Gun என்ற நூலுக்கு எழுதிய அறிமுகவுரை அதற்கு நல்ல எடுத்துக்காட்டு.

ஒரு சிங்கம், சாலை வழியே போன அரசகுமாரி மீது மோகம் கொண்டு அவளைத் தூக்கிச் சென்று தனது குகையில் அடைத்து வைக்கிறது. சிங்கத்துக்கும் அந்த அரசகுமாரிக்கும் பாதி மிருகம் பாதி மனித உருவில் ஒரு ஆண் ஒரு பெண் என இரண்டு குழந்தைகள் பிறக்கின்றன. ஒருநாள் தாயும் பிள்ளைகளும் குகையில் இருந்து தப்பி ஓடுகிறார்கள். அவர்களைத் தேடிப் போன சிங்கத்தை சிங்கபாகு என்ற மகன் கொன்றுவிடுகிறான். அதன் பின்னர் அண்ணன் சிங்கபாகு தங்கை சிங்கவல்லியை மணக்கிறான். அவர்களுக்கு 16 இரட்டைக் குழந்தைகள் என மொத்தம் 32 குழந்தைகள் பிறக்கின்றன. அதில் மூத்தவனான விஜயன் பெரிய நட்டாமுட்டி. அவனது ஆய்க்கினை தாங்கமுடியாத தகப்பன் அவனையும் அவனது 700 தோழர்களையும் மொட்டை அடித்து தோணிகளில் ஏற்றி நாடுகடத்தி விடுகிறான்.

இந்தக் கதை எந்தவகையிலும் பெருமைக்குரியது அன்று. மோகவெறி பிடித்து சிங்கத்தை மணக்கும் அரசகுமாரி, தகப்பனைக் கொல்லும் மகன், தங்கையை முறைதவறிப் புணரும் அண்ணன், அவர்களுக்குப் பிறந்த மகன் மொட்டை அடிக்கப்பட்டு நாடுகடத்தல் இப்படிப்பட்டவர்களின் வாரிசுகள்தான் சிங்களவர்கள் என்பது மிக மிக அசிங்கமான, அருவருப்பான கட்டுக்கதை. அதனை சிங்கள மக்கள் நகைத்து நிராகரிப்பார்கள் என்றுதான் யாரும் எதிர்பார்ப்பார்கள். காரணம் தமிழர்களை விட அவர்களுக்கு நகைச் சுவை உணர்வு அதிகம். ஆனால் அவர்களோ அதனை உச்சி மீது வைத்து மெச்சுகிறார்களே என அமரர் சிவநாயகம் எள்ளி நகையாடியுள்ளார்.

தமிழீழ போராட்ட வரலாறு முறையாக எழுதப்படும்போது அமரர் சிவநாயகம் அவர்களது பங்களிப்பும் அர்ப்பணிப்பும் வைர எழுத்துக்களால் எழுதப்படும்.

ஒரு மனிதன் இந்த உலகில் எத்தனை ஆண்டுகள் வாழ்கிறான் என்பது முக்கியமல்ல. அவன் தனது வாழ்நாளில் தனது மக்களுக்கும் நாட்டுக்கும் எதனைச் சாதிக்கிறான் என்பதே முக்கியமானது. அமரர் சிவநாயகம் ஒரு எழுத்துப் போராளி. அவர் போன்றவர்களுக்கு சாவு இல்லை. அவர்கள் சாகா வரம் பெற்றவர்கள். அவர் விட்டுச் சென்ற பணியை முன்னரைவிட ஆயிரம் மடங்கு மூச்சாக முன்னெடுப்பதே அமரர் சிவநாயகத்துக்கு நாம் செலுத்தக் கூடிய மிகப் பெரிய நினைவேந்தலாகும்.

எங்கள் பணி தொடர்கிறது. எமது இலட்சியம் தொடர்கிறது, நம்பிக்கை இன்னும் வாழ்கிறது. எங்களது கனவுகள் ஒருபோதும் மடியாது!

அவரைப் பிரிந்து வாடும் மனைவி, மக்கள், உற்றார், உறவினர் அனைவருக்கும் தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் தனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

Please Click here to login / register to post your comments.