தமிழை வளர்க்க தமிழில் பேசுவோம்: பீ.எச்.அப்துல் ஹமீத்

சரியான உச்சரிப்புகள் இல்லாமல் தமிழ் வானொலிகளின் உரையாடல்கள் தமிங்கிலிஸ் மயமாகுவதை தடுப்பதற்கு நாமெல்லோரும் நல்ல தமிழில் உரையாடுவதோடு தமிழுக்கு முன்னுரிமை கொடுத்து பழக வேண்டும் என உலக அறிவிப்பாளர் பீ.எச்.அப்துல் ஹமீத், தமிழ்மிரர் இணையத்தளத்தின் கலைஞர்களுக்கான நேர்காணல் பகுதிக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் தெரிவித்தார்.

சிறகுகளை விரித்து பட்டாம்பூச்சியாக பறக்கவேண்டிய சிறுவயதில் அழையாத விருந்தாளியாக இலங்கை வானொலி கலையகத்தில் கால்பதித்த பீ.எச்.அப்துல் ஹமீத், இன்று உலகம் போற்றும் சிறந்த அறிவிப்பாளராகவும் ஒளிபரப்பாளராகவும் பல பரிமாணங்களில் எம் முன் பரிணமித்துக்கொண்டிருப்பது கண்கூடு.

இவரின் அறிவிப்புத்துறையின் உள்நுழைவே சற்று வித்தியாசமானது.

வானலையில் தனது குரலும் ஒலிக்காதா என்று ஏங்கிய சின்னஞ் சிறு வயதில் இலங்கை வானொலி கலையகத்திற்கு செல்லும் வாய்ப்பு அப்துல் ஹமீத்துக்கு எதிர்பாராதவிதமாக கிட்டியது.

இலங்கை வானொலியில் அக்காலத்தில் ஒலிபரப்பப்பட்ட நிகழ்வை பார்ப்பதற்கான சந்தர்ப்பம் இவரது சிநேகிதன் ஜோசேப் எட்வர்ட்டுக்குக் கிட்டவே, அவருடன் இவரும் இணைந்து அந்நிகழ்வை பார்க்கச் சென்றுள்ளார்.

அன்றைய தினம் பச்சைமலைத்தீவு நாடகத்தில் பூதம் பாத்திரமேற்று நடிக்கவிருந்தவர் சமூகமளிக்கவில்லை. நாடகத்தையும் இடைநிறுத்த முடியாத இக்கட்டானதொரு சூழ்நிலை. இந்நிலையில், நாடகத்தை பார்வையிட வந்த பார்வையாளர்களிடம் குரல் தேர்வு நடத்தப்பட்டது. அங்கேதான் இவருக்கான அதிர்ஷ்டமும் கிட்டியது.

குரல் தேர்வின் இறுதியில் அந்நாடகத்தில் பூதம் பாத்திரமேற்று நடிப்பதற்கான வாய்ப்பு இவருக்கு கிட்டியது. இதுவே அவர் உலக அறிவிப்பாளராக மிளிருவதற்கு ஆரம்பப்படியாக அமைந்தது. அப்போது அவருக்கு 10 வயது.

இவரது சிறந்த குரல்வளமே அவர் கடல் கடந்து செல்வதற்கு காரணமானது. வெறுமனே அறிவிப்புத்துறையில் மிளிராமல் ஒளிபரப்பு, வெள்ளித்திரை, மேடை, நாடகம், வசன அமைப்பாளர், பாடலாசிரியர் என பல துறைகளிலும் இவரது திறமைகள் இன்றுவரையிலும் மிளிர்ந்துகொண்டிருக்கின்றன.

வானலையில் இவரது குரல் ஒலிக்கத் தொடங்கி 50 வருடங்களை கடந்துவிட்ட நிலையில், சிறந்த இளம் அறிவிப்பாளர்கள் பலரை உருவாக்கிய பெருமையும் அப்துல் ஹமீத்தையே சாரும்.

இவரது மாணவர்கள் புலம்பெயர் நாடுகளில் சென்று அங்கு தமது அறிவிப்புத்துறையினூடாக மொழித்திறமையையும் சிறப்பாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

அறிவிப்புத்துறையின் முன்னோடியாக விளங்கும் இவர், தொகுத்தளித்த நிகழ்ச்சிகளில் மிக முக்கியமானது பாட்டுக்குப் பாட்டு வாரங்களையும் கடந்துவிட்ட இந்நிகழ்ச்சி பல பாடகர்களை உலகறியச் செய்துள்ளது என்பதை இங்கு குறிப்பிட்டேயாகவேண்டும்.

அறிவிப்பு பணியில் ஈடுபடுபவர்களால்தான் தாய்மொழியும் வளர்க்கப்படவேண்டும். அன்று இலங்கை வானொலியில் அறிவிப்புத்துறையில் ஓர் உச்சரிப்பு பிழைவிட்டாலும், அதற்கான தண்டனை மிக வலுவனாதாக இருந்தது. அப்படித்தான் நாங்கள் அன்று எங்கள் தாய்மொழியை எல்லோருக்கும் கொண்டு சென்றோம். இன்று அறிவிப்புத்துறையில் உள்ளவர்கள் அதனை சரியாக செய்கின்றார்களா என்பதே கேள்விக்குறிதான்? இன்றைய அறிவிப்பாளர்கள் தமிழ்மொழியை மட்டுமன்றி வேற்றுமொழிகளையும் கலந்து சம்பாஷனை வடிவில் அறிவிப்புசெய்வதால் எதிர்காலத்தில் கொச்சைத் தமிழ் மட்டுமே நிலைக்கப்போகிறது... என்பது இவரது அறிவிப்புத்துறை சார்ந்த ஆதங்கம் ஆகும்

Please Click here to login / register to post your comments.