ஈழத்தமிழர் விடயத்தில் இந்திய அரசாங்கம் அக்கறை செலுத்தாமையை கண்டித்து தமிழகம் முழுவதும் எதிர்வரும் 20 ஆம் திகதி ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்று திராவிடர் கழகத் தலைவர் சி. வீரமணி அறிவித்துள்ளார்.
இது குறித்து சென்னையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
திரு கோணமலையில் பேசிய இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷ விடுதலைப்புலிகளை அடியோடு அழித்தால் ஒழிய இலங்கையில் அமைதி திரும்பாது என்று கூறியிருக்கிறார். பல நாடுகள் இராணுவ நடவடிக்கை மூலம் ஈழத்தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது. அரசியல் தீர்வு தான் ஒரே வழி என்று சொன்னதை ராஜபக்ஷ கேட்க தயாரில்லை. ஓர் இறுதிப் போராட்டத்துக்கு இலங்கை இராணுவமும் புலிகளும் தயாராகி வருகின்றனர். நிலைமை நாளுக்கு நாள் மிக மோசமாகப் போய்க் கொண்டிருக்கிறது.
இந்திய அரசு இதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கலாமா? இதனை மத்தியில் ஆளும் கூட்டணியாக உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களும் மனதில் கொள்ள வேண்டும். இதனை வலியுறுத்தி 20 ஆம் திகதி தமிழ் நாடு முழுவதும் மாவட்டத் தலைநகர்களில் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம். ஈழத் தமிழர்கள் வாழ்வுரிமையைப் பறிக்கும் இலங்கை அரசினை இந்தியா அரசு உட்பட பன்னாட்டு அரசுகளும் தடுத்து நிறுத்தி மனித நேயப்பணியில் ஈடுபட வேண்டும் என்பதை வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டங்கள் இடம் பெறவுள்ளன.
சென்னையில் எனது தலைமையில் காலை11 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
Published: Dec 03, 2009 05:00 GMT