Thursday - 02nd of September 2010

Home | About Us | Suggest this page | Feedback

Amparai
Batticaloa
Jaffna
Kilinochchi
Mannar
Mullaitivu
Puttalam
Trincomalee
Vavuniya
TC News:
   » Home -> News Room -> Tamil News -> Full Story

நீதித்துறையை வேவு பார்க்கும் அதிகாரத்தின் அரூபக் கரங்கள்
   [ உதயன் ] - [ Sep 02, 2010 04:00 GMT ]

இலங்கையின் நீதித்துறை உயர் அதிகாரிகள் குறித்து இலங்கையின் சட்ட வரலாற்றில் முதல் தடவையாக தேசிய உளவுப்பிரிவு மும்முரமாகப் புலனாய்வு செய்யத் தொடங்கியிருப்பதாகத் தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

வேறு வார்த்தைகளில் இதைக் கூறுவதானால் நீதித் துறை அதிகாரிகளை அவர்களது நடவடிக்கைகளை வேவு பார்க்கும் வேலை உளவுப்பிரிவால் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது. "நீதி நிலைநாட்டப்படுவது மட்டுமன்றி நிலைநாட் டப்படுவதாகக் காட்டப்படவும் வேண்டும்' (Justice not only be done but also appear to be done) என்ற அர்த்தம் பொதிந்த வாசகம் ஒன்று உண்டு.

நீதித்துறை அதிகாரிகள், நியாயம் செய்பவர்களாக விளங் குவதற்கு அவர்கள் சுதந்திரமானவர்களாக சுயாதீனமான வர்களாக நடுநிலையாளர்களாக நீதி செய்யும் விடயத் தில் அச்சமற்றவர்களாக திகழ வேண்டும். அச்சத்துக் கும், அழுத்தத்துக்கும், நெருக்குதலுக்கும், நெருக்கடிக் கும் உள்ளாகியுள்ள ஒருவரால் நீதி செய்வதோ இயலாத விடயம். அரச உளவுப் படைகளால் துருவித் துருவி நோண்டப்படுபவர்களாக நோட்டமிடப்படுபவர்களாக நோக்கப் படுபவர்களாக இருக்கும் நீதித்துறை அதிகாரிகள், அத னால் அரச தரப்பின் நியாயமற்ற அழுத்தத்துக்கு உள்ளா கின்றார்கள் என்றே கொள்ள வேண்டும். அத்தகைய உய ரதிகாரிகள் உண்மையில் நீதி செய்தாலும், அவர்களால் நீதி நிலைநாட்டப்பட்டதாக மக்கள் நம்பமுடியாத நிலையே ஏற்படும். எனவே, கௌரவத்துக்குரிய நீதித்துறையினரை சந்தேகக் கண்கொண்டு பார்க்கும் நிலை மாறாவிட்டால் நீதி நிலைநாட்டப்படுவதும் சந்தேகத்துக்குரியதாகிவிடும். அரசின் புலனாய்வுப்பிரிவு, வேவு அணி, உளவுப்படை போன்றவற்றை அரசியல்வாதிகளுக்கு எதிராகக் களத்தில் இறக்கி, மாற்றுத்தரப்பினரை அடிபணிய வைக்கும் கைங்கரியத்தில் ஈடுபட்டு வந்த அரசுத் தலைமை, இப்போது அதே துரும்புச் சீட்டை நீதித்துறைப் பக்கமும் ஏவிவிட் டிருக்கின்றது.

ஒரு நாட்டில் ஜனநாயகத்தின் நியாயத்தின் தர்மத் தின் ஆட்சி நிலவுவதற்கு மூன்று துறைகள் சிறப்பாக இயங்க வேண்டும். அவை: நிறைவேற்று அதிகாரம், சட்டமாக்கல் துறை, நீதித்துறை.

இலங்கையில் பாதுகாப்பு உள்ளிட்ட நிறைவேற்று அதி காரம் (ஆட்சித்துறைத் தத்துவம்) மக்களால் நேரடியாகத் தேர்தல்மூலம் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதியினால் பிரயோகிக்கப்படுகின்றது. நிறைவேற்று அதிகாரம் முழு வதும் தனி ஒரு மனிதரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

மக்களின் சட்டமாக்கல் அதிகாரம் (தத்துவம்) மக்க ளால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்றத்திடம் ஒப் படைக்கப்பட்டுள்ளது. சில சமயங்களில் சர்வஜன வாக் கெடுப்பு மூலம் மக்களே நேரடியாக அதைப் பிரயோகிக் கவும் முடியும்.

அடுத்தது நீதித்துறை. நாடாளுமன்ற விவகாரங்கள் தவிர்ந்த ஏனைய அம்சங்களில் நீதித்துறை அதிகாரமானது சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட நீதிமன்றங்கள், நியாய சபைகள் போன்றவற்றால் பிரயோகிக்கப்படுகின்றது.

இந்த மூன்று துறைகளுமே ஒன்றை மற்றொன்று நெருக்குதலுக்கு உள்ளாக்காமலும், ஒன்றின் செயற் பாட்டை மற்றையது முறையற்ற விதத்தில் பாதித்துக் குறுக்கீடு செய்யாமலும், சுதந்திரமாகவும், சுயாதீனமாக வும் அவையவைக்குத் தரப்பட்டுள்ள வரையறைக்குள் நின்றும் செயற்படும்போதுதான் நாட்டில் ஆட்சிமுறை நியாயமானதாக அமையும். நல்லாட்சி நடைபெறுவதாக அர்த்தப்படும். இலங்கையைப் பொறுத்தவரை நிறைவேற்று அதி காரத்திடம் ஆட்சித்துறைத் தத்துவம் இருப்பதால், அந்த ஆட்சித்துறை வழங்கும் பதவிகளுக்கு அடிபணிந்து கையேந்தி நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை அங் கத்தவர்கள் அந்த நிறைவேற்று அதிகாரத்துக்கு அடிமை யாகிவிட்டார்கள். அதாவது சுதந்திரமாகவும் சுயாதீனமாக வும் இயங்கவேண்டிய நாடாளுமன்றம், நிறைவேற்று அதிகாரத்தின் கைப்பொம்மையாகிவிட்டது. இப்போது நீதித்துறையையும் நிறைவேற்று அதிகாரத்தின் ஏவலுக் குள் கொண்டுவரும் முயற்சிகள் முடுக்கி விடப்பட்டிருக் கின்றன. நீதித்துறை அதிகாரிகளை வேவுபார்க்கும் நிறை வேற்று அதிகாரத்தின் செயற்பாடு அத்தகைய அர்த்தத் தையே நமக்குத் தருகின்றது.

இவ்விவகாரத்தில், ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை தென்னிலங்கை பௌத்த சிங்கள மேலாண்மைப் பிடியில் சிக்கி, அதையே தனது அதிகார நெறி வரம்பாக வரித்துக் கொண்டுள்ள இந்த ஆட்சி முறைமையின் கீழ் நல்லாட்சி என்பதே சாத்தியமற்றது. அதுவே அவர்களின் பட்டறிவு நிலைப்பாடு. ஆரம்பத்தில் சிறுபான்மையினரான ஈழத் தமிழர் களையும், நியாயம் வேண்டிக் கிளர்ந்துள்ள அவர்களின் எழுச்சியையும் அடக்குவதற்கு சிங்கள அரசியல் தலைமை களினால் வேவுப்படைச் செயற்பாடுகள் முழு அளவில் முடுக்கிவிடப்பட்டன.

பின்னர் அவை மெல்ல மெல்ல தென்னிலங்கையில் எதிரணி அரசியல்வாதிகளை அடக்கி ஒடுக்கி அடிபணிய வைக்கவும், அவர்களைப் பழிவாங்கவும் வசதியான ஒரு வழிமுறையாகக் கையாளப்பட்டது. இப்போது அது நீதித் துறையின்பாலும் திருப்பப்பட்டிருக்கின்றது. அதுதான் நாம் இப்போது உணர்ந்து கொள்ளும் செய்தி.


Published: Sep 02, 2010 04:00 GMT