தொடர்ச்சியான போராட்டங்களின் மூலமே காணாமல் போதல், கடத்தல்களை நிறுத்த முடியும்

[ வீரகேசரி ] - [ Oct 29, 2007 10:48:38 GMT ]

காணாமல் போனோர் குடும்ப ஒன்றியத் தலைவர் பிரிட்டோ பெர்னாண்டோ தெரிவிப்பு. நீர்கொழும்பு, காணால் போனோர் தொடர்பாகவும், மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும் அன்று எங்களுடன் ஒன்று சேர்ந்து சிவப்பு நிறத் துண்டொன்றை தோளில் சுமந்தபடி குரல் கொடுத்தவர், இன்று ஜனாதிபதியாக இருப்பது எங்களுக்கு பெருமைதான். ஆனாலும் இன்று அவரது ஆட்சியின் கீழ் வடக்கிலும் கிழக்கிலும் தெற்கிலும் மேற்கிலும் மக்கள் காணாமல் போவது வருத்தத்திற்குரியது. இவ்வாறு காணாமல் போனோரின் குடும்ப ஒன்றிணைப்பு அமைப்பின் தலைவர் பிரிட்டோ பெர்னாண்டோ கூறினார்.

சீதுவை, ரத்தொழுவை சந்தியில் உள்ள காணாமல் போனோர் ஞாபகார்த்த நினைவுத் தூபிக்கு அருகில் நேற்று முன்தினம் சனிக்கிழமை காலை நடைபெற்ற "வடக்கிலும் தெற்கிலும் காணாமல் போவது எமது பிள்ளைகளே' எனும் தொனிப் பொருளில் நடைபெற்ற ஒக்டோபர் 27 நினைவு தின நிகழ்ச்சியில் உரையாற்றுகையிலேய அவர் மேற்கண்டவாறு கூறினார்.

காணாமல் போனோரை நினைவு கூர்ந்து 17 ஆவது தடவையாக நடைபெறும் இந்நிகழ்ச்சியில், காணாமல் போனோரின் குடும்ப அங்கத்தவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.காணாமல் போனோரின் புகைப்படங்கள் (நிழற்படங்கள்) கொண்டு அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபிக்கு முன்னால் முற்பகல் 10.30 மணியளவில் உறவினர்கள் கண்ணீர் மல்க மலரஞ்சலி செலுத்தியதோடு, அதன் பின்னர் நடைபெற்ற எதிர்ப்பு நடவடிக்கையின் போது, பதாதைகள், போஸ்டர்களுடன் அமைதியான முறையில் தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

பிரிட்டோ பெர்னாண்டோ அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், அன்று மரணித்தவர்களுக்கு ஜே.வி.பி. புலிகள் என பெயர் இருந்தது. இன்று வீதியில் மரணித்துக் கிடப்பவர்களுக்கு எந்தவித அடையாளமும் இல்லை. எமது தொடர்ச்சியான போராட்டங்களின் மூலமாகவே தொடர்ந்தும் நடைபெற்று வரும் இது போன்ற காணாமல் போகும் சம்பவங்களை தடுத்து நிறுத்த முடியும் என்றார்.