Thursday - 02nd of September 2010

Home | About Us | Suggest this page | Feedback

Amparai
Batticaloa
Jaffna
Kilinochchi
Mannar
Mullaitivu
Puttalam
Trincomalee
Vavuniya
TC News:
   » Home -> News Room -> Tamil News -> Full Story

உண்ணாவிரதத்தில் 'பர்கர்' சாப்பிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட இலங்கைத் தமிழர் 80 ஆயிரம் பவுண்ஸை இழப்பீடாகப் பெறுகிறார்
   [ தினக்குரல் ] - [ Sep 02, 2010 04:00 GMT ]

பிரிட்டிஷ் பாராளுமன்றத்திற்கு வெளிப்புறத்தில் உண்ணாவிரதமிருந்தபோது பர்கர்களை சாப்பிட்டதாக பிரிட்டிஷ் பத்திரிகைகளால் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த இலங்கைத் தமிழர் ஒருவருக்கு 80 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ஸ் நஷ்டஈடு கிடைக்கவுள்ளது.

பரமேஸ்வரன் சுப்பிரமணியம் என்ற இந்த இலங்கைத் தமிழர் சுமார் 80 ஆயிரம் பவுண்ஸ் அல்லது 95 ஆயிரம் யூரோ அல்லது 1,25,000 டொலர்களை நஷ்டஈடாக டெய்லிமெயில் மற்றும் சண் பத்திரிகைகளிடமிருந்து பெற்றுக்கொள்ளவிருப்பதாக அவரின் சட்டத்தரணியை மேற்கோள்காட்டி ஏ.எவ்.பி. செய்திச்சேவை நேற்றுத் தெரிவித்தது.

இலங்கையில் தமிழர்கள் நடத்தப்படும் விதத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரிட்டனில் கடந்த வருடம் ஆயிரக்கணக்கான தமிழர்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அதன் ஒரு அங்கமாக சுப்பிரமணியம் 23 நாட்கள் உண்ணாவிரதமிருந்தார். பின்னர் 5 நாட்கள் மருத்துவமனையில் அவர் இருந்தார்.

29 வயதுடைய சுப்பிரமணியம் பரமேஸ்வரன் உண்ணாவிரதத்தின்போது மக்டொனாட் இடமிருந்து பர்கர்களை இரகசியமாகப்பெற்றுச் சாப்பிட்டதாக இந்த இரு பத்திரிகைகளும் தவறான முறையில் குற்றஞ்சாட்டியிருந்தன. லண்டன் மேல் நீதிமன்றத்தில் இப்பத்திரிகைகளுக்கு எதிராக பரமேஸ்வரன் மனுத்தாக்கல் செய்திருந்தார். இப்போது இந்தப் பத்திரிகைகள் மன்னிப்புக்கேட்டுக் கொண்டதுடன் குற்றச்சாட்டுகளை வாபஸ் பெற்று சுமார் 80 ஆயிரம் பவுண்ஸ் இழப்பீடுகளைச் செலுத்துவதற்கு இணங்கியுள்ளன.

மனுதாரர் உண்ணாவிரதத்தின்போது எந்தவொரு உணவையும் உட்கொண்டிருக்கவில்லை என நீதிபதி டேவிட் ஈடி தமது தீர்ப்பில் கூறியுள்ளார். மனுதாரரின் கௌரவத்தை இந்த விடயம் பாதிப்பதுடன் அவர் மதிப்புச் செலுத்துகின்ற தனியொரு வெற்றியையும் உதாசீனப்படுத்துவதாக இது அமைந்திருப்பதாக நீதிபதி கூறியுள்ளார். உண்மைக்குப் புறம்பான செய்திகள் பிரசுரிக்கப்பட்டதால் தமிழர்களினால் பரமேஸ்வரன் அகௌரவமான விதத்தில் நோக்கப்பட்டதாகவும் ஏனெனில் அவர் தங்களுக்கு துரோகமிழைத்துவிட்டதாக அவர்கள் நம்பியதாகவும் மற்றும் உலகளாவிய ரீதியிலான தமிழர்களின் போராட்டத்தை உதாசீனப்படுத்திவிட்டதாகக் கருதியதாகவும் நீதிபதி கூறியுள்ளார்.

பத்திரிகைகளில் இந்தச் செய்திகள் பிரசுரிக்கப்பட்டதையடுத்து தற்கொலை செய்வது குறித்து தான் சிந்தித்திருந்ததாகவும் ஏனெனில் ஏனைய தமிழர்கள் மத்தியிலிருந்து விமர்சனத்தை தான் எதிர்நோக்கியதாகவும் பரமேஸ்வரன் கூறியுள்ளார்.

கையடக்கத் தொலைபேசிகள் மூலம் தமிழ்ச் சமூகத்திடமிருந்து எனக்கு மரண அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டிருந்தன. "பரமேஸ்வரனைக் கொல்%27 மற்றும் "நிந்தனையான வார்த்தைகள்%27 அடங்கிய மிரட்டல்களை விடுத்திருந்ததாகவும் பரமேஸ்வரன் ஏ.எவ்.பி.க்குக் கூறியுள்ளார்.


Published: Sep 02, 2010 04:00 GMT